உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பிர்மிங்காமில் நேற்று நடந்தது. அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், தோல்வியையே தழுவாத கெத்துடன் இந்திய அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அதிரடி சதம் மற்றும் ஜேசன் ராய், ஸ்டோக்ஸின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால் 50 ஓவர் முடிவில் 337 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை அடித்தது. 

338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, அதன்பின்னர் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான ரோஹித்தும் கோலியும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். இவர்கள் இருவரும் களத்தில் நின்றபோது இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த கோலி 66 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் வழக்கம்போல தனது அரைசதத்தை சதமாக மாற்றினார். ஆனால் சதமடித்த பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடும் ரோஹித், இந்த முறை 102 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 

அதன்பிறகு ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே அடித்து ஆடினர். ரிஷப் பண்ட் 32 ரன்களில் வெளியேற, இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஹர்திக் பாண்டியா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 45வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தோனியும் கேதரும் ஆடிய ஆட்டம் காணக்கிடைக்காதது. ஹர்திக் பாண்டியா அவுட்டான போது 45 ஓவர் முடிவில் இந்திய அணி 267 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி 5 ஓவர்களில் இந்திய அணிக்கு 71 ரன்கள் தேவைப்பட்டது. அடிப்பதற்கு கடினமான இலக்குதான் என்றாலும் அதை அடிக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும். ஏற்கனவே ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக மிகவும் மந்தமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான தோனி - கேதர் ஜோடி, தாங்கள் செய்த சம்பவத்தை தாங்களே முறியடிக்கும் நோக்கில் அதைவிட படுமோசமாக ஆடினர். 

கடைசி 5 ஓவர்களில் அடிப்பதற்கு முயற்சி கூட செய்யவில்லை. இங்கிலாந்து பவுலர்கள், பந்துகளை மிகவும் மெதுவாக வீசி அடிக்கவிடாமல் செய்தனர். ஆனால் அடித்து ஆடமுடியாததற்கு அதை காரணமாக சொல்லமுடியாது. அடித்து ஆட முயற்சி செய்து, சரியாக அடித்து ஆடமுடியவில்லை என்று காரணம் சொல்லலாம். ஆனால் தோனியும் கேதரும் முயற்சியே செய்யவில்லை. இருவரும் இலக்கை விரட்டுவதற்காக ஆடுகிறார்களா அல்லது ஓவரை முடிப்பதற்காக கடமைக்காக ஆடுகிறார்களா என்ற யோசிக்கும் அளவிற்கு ஆடினர். 

கடைசி 5 ஓவர்களில் 6 டாட் பந்துகள். கடைசி 30 பந்துகளில் அடிக்கப்பட்ட ரன் வெறும் 39 மட்டுமே. விளையாட்டில் ஜெயிப்பதும் தோற்பதும் சகஜம் தான். ஆனால் எப்படி தோற்றோம் என்பது இருக்கிறதல்லவா? கொஞ்சமாவது போராடி தோற்றிருக்கலாம். ஆனால் கடைசி 6-7 ஓவர்களில் போராட்டமே இல்லாமல் தோற்றது இந்திய அணி.