ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சிஎஸ்கே. 

நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் மிரட்டலான ஃபினிஷிங்கால் 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது. 

180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் பேட்டிங் வரிசையை இம்ரான் தாஹிரும் ஜடேஜாவும் இணைந்து சரித்துவிட்டனர். சிஎஸ்கே ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங் மற்றும் தோனியின் அசத்தலான விக்கெட் கீப்பிங்கால் டெல்லி அணி வெறும் 99 ரன்களுக்கே சுருண்டது. இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 44 ரன்களை குவித்ததோடு, கிறிஸ் மோரிஸ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் மின்னல் வேக ஸ்டம்பிங்கின் மூலம் வெளியேற்றிய தோனி, ஆட்டநாயகன் விருதை வென்றார். இது இந்த சீசனில் தோனி வெல்லும் மூன்றாவது ஆட்டநாயகன் விருது. 

அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் தோனி வெல்லும் 17வது ஆட்டநாயகன் விருது இது. இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்துள்ளார் தோனி. ரோஹித் சர்மாவும் 17 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். தற்போது அவரை தோனி சமன் செய்துள்ளார்.