IPL 2023: காயத்தால் விலகிய கமலேஷ் நாகர்கோட்டிக்கு மாற்று வீரராக முன்னாள் SRH வீரரை ஒப்பந்தம் செய்தது DC
ஐபிஎல் 16வது சீசனிலிருந்து காயத்தால் விலகிய கமலேஷ் நாகர்கோட்டிக்கு மாற்று வீரராக பிரியம் கர்க்கை அறிவித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக ஆடவில்லை. அதில் குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா, ரஜத் பட்டிதார் ஆகிய வீரர்கள் ஆடாதது முறையே மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.
ஃபாஸ்ட் பவுலர்கள் தீபக் சாஹர் மற்றும் முகேஷ் சௌத்ரி ஆடாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஆனால் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீஷா பதிரனா ஆகிய வீரர்களை அருமையாக வழிநடத்தி கேப்டன் தோனி அசத்திவருகிறார்.
கேன் வில்லியம்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய வீரர்களும் காயத்தால் ஆடவில்லை. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக பேட்ஸ்மேனான பிரியம் கர்க்கை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 3 சீசன்களில் விளையாடி 21 போட்டிகளில் ஆடியுள்ள பிரியம் கர்க் பெரியளவில் கவராததால் அவரை விடுவித்தது சன்ரைசர்ஸ் அணி. இந்நிலையில், அவர் மீது நம்பிக்கை வைத்து ரூ.20 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
டெல்லி கேபிடள்ஸ் அணியில் ரிஷப் பண்ட் ஆடாததால் இந்த சீசனில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. அதனால் முதல் 5 போட்டிகளிலும் படுதோல்வியடைந்த டெல்லி அணி, 6வது போட்டியிலும் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது. எனவே பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியிருப்பதால் பிரியம் கர்க்கை அணியில் எடுத்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.