ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் டெல்லி கேபிடள்ஸும் ஒன்று.

12 ஐபிஎல் சீசன்கள் இதுவரை நடந்துமுடிந்துள்ளன. ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

டெல்லி கேபிடள்ஸ் அணி முதன்முறையாக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் என்ற ஜாம்பவான் இருப்பது போதாதென்று, கடந்த சீசனில் கங்குலியை ஆலோசகராக நியமித்தது. 

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேபிடள்ஸ் அணி, பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றிலும் வெற்றி பெற்று, இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்று வெளியேறியது. 

இந்நிலையில், அடுத்த சீசனிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் அந்த அணியின் நட்சத்திர வீரருமான ரஹானேவை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறது. ரஹானே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். தொடர் தோல்விகள் காரணமாக திடீரென கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டு ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

ரஹானேவை வாங்குவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டெல்லி கேபிடள்ஸ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த டீல் முடியுமா முடியாதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.