ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. 19ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், 3 முறை சாம்பியனும் கடந்த சீசனில் ரன்னர் அப் அணியுமான சிஎஸ்கேவும் மோதுகின்றன. முதல் போட்டியே, ஐபிஎல்லின் வெற்றிகரமான 2 அணிகளுக்கு இடையே நடப்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ஐபிஎல்லில் ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே, இந்த சீசனில் நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆர்வத்தில் துபாய்க்கு சென்ற சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்து சில அடிகள் விழுந்தன.

சிஎஸ்கே அணி வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட அந்த அணியை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவே சிஎஸ்கே அணிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, அதன்விளைவாக சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது விமர்சிக்கப்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை சிஎஸ்கே சமாளித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென  சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால் துபாயிலிருந்து இந்தியா திரும்பினார். அதைத்தொடர்ந்து நட்சத்திர மற்றும் சீனியர் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங், இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகினார்.

இப்படியாக தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, ஆனால் அதற்கெல்லாம் சிஎஸ்கே அசரவில்லை. ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை கூட ஒப்பந்தம் செய்யவில்லை சிஎஸ்கே. இருக்கும் வீரர்களை வைத்தே பார்த்துக்கொள்ளலாம் என்றளவிற்கு சிஎஸ்கே கேப்டன் தோனியும் அணி நிர்வாகமும் உள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கடைசியாக செய்யப்பட்ட 2 கொரோனா பரிசோதனைகளிலும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தொடர்ச்சியாக 2 பரிசோதனைகளில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால், அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த தகவலை சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Also Read  - என் கெரியரில் நான் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவருதான்..! கேன் வில்லியம்சன் ஓபன் டாக்

ஆனால் அவர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதை உறுதிப்படுத்தும் வகையில் கார்டியோ வாஸ்குலர் டெஸ்ட் செய்யப்படவுள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டுமொருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதிலும் அவருக்கு நெகட்டிவ் என்றால், அவர் சிஎஸ்கே அணியிடன் பயிற்சியில் இணைவார். ஆனால் அவருக்கு மேலும் ஒரு பரிசோதனை செய்து, அதன் ரிசல்ட் வந்து, அவர் அணியுடன் இணைவதற்கு இன்னும் குறைந்தது 4 நாட்கள் ஆகும் என சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.