சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான கேன் வில்லியம்சன், சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி அடையாளத்துடன் கோலோச்சுகிறார். சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது, மிகச்சிறந்த கேப்டனாகவும் திகழும் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த வரப்பிரசாதம்.

2010ம் ஆண்டிலிருந்து நியூசிலாந்து அணியில் ஆடிவரும் கேன் வில்லியம்சன், இதுவரை 80 டெஸ்ட், 151 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் முறையே, 6476, 6173 மற்றும் 1665 ரன்களை குவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் வெற்றிகரமான வீரராக கோலோச்சும் வெகுசில வீரர்களில் கேன் வில்லியம்சனும் ஒருவர். தடுப்பாட்டம், அதிரடி ஆட்டம் ஆகிய இரண்டையுமே திறம்பட ஆடவல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தலைசிறந்த வீரர் வில்லியம்சன். 

ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் கேன் வில்லியம்சன், ஐபிஎல் நெருங்கிய நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துவருகிறார். அந்தவகையில், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் யார் என்ற ரசிகரின் கேள்விக்கு, டேல் ஸ்டெய்ன் என்று வில்லியம்சன் பதிலளித்துள்ளார்.

வில்லியம்சன் தனது கெரியரில் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், டேல் ஸ்டெய்ன், பும்ரா, காகிசோ ரபாடா, ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டுள்ளார். அவர்களில் டேல் ஸ்டெய்ன் தான் மிரட்டலான பவுலர் என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 2013ல் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் ஸ்டெய்னின் வேகத்தில் வில்லியம்சனுக்கு அடிவயிற்றில் பலத்த அடி விழுந்தது குறிப்பிடத்தக்கது.