ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என்று அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் முடிவு செய்துவிட்டதால், அவர் நன்றாக ஆடினாலும் ஆடாவிட்டாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக சொதப்பியே வருகிறார். 

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பியதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவர் நீக்கப்பட்டு சஹா ஆடும் லெவனில் இடம்பிடித்தார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. அவரது விக்கெட் கீப்பிங்கின் மீது நம்பிக்கையில்லாமல்தான் அவர் தென்னாப்பிரிக்க தொடரில் கழட்டிவிடப்பட்டார். ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் பந்து நன்றாக திரும்பும். எனவே ரிஷப் பண்ட் தடவுவார் என்பதால்தான் அவர் நீக்கப்பட்டு சஹா எடுக்கப்பட்டார். 

டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ந்து ஆடிவருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 டி20 போட்டியில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பினார். ரிவியூ எடுப்பதில் ரிஷப் பண்ட்டின் முடிவு படுமோசமாக உள்ளது. அவரது கணிப்பு பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. முதல் டி20 போட்டியில் பேட்டிலேயே படாத ஒன்றுக்கு விக்கெட் கீப்பிங் கேட்ச் என்று ரிவியூ எடுக்கவைத்தார். ஆனால் அது அவுட்டே இல்லை. அபத்தமான ரிவியூ அது. அதேபோல பேட்டிங்கிலும் சொதப்பினார். அதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறார் ரிஷப் பண்ட். 

ரிஷப் பண்ட்டின் மீது அழுத்தம் அதிகரித்து கொண்டே இருப்பதால், அவர் தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது அணியின் சூழலுக்கு ஏற்ப ஆடுவதா என்று தெரியாமல் குழம்பிப்போயிருக்கிறார். அது அவரது ஆட்டத்திலும் எதிரொலிக்கிறது. 

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ், ரிஷப் பண்ட் இப்போதுதான் கற்றுக்கொண்டிருக்கிறார். அவர் பெரும்பாலும் லெக் திசையில்தான் அடித்து ஆடுகிறார். ஆஃப் திசையில் அடித்து ஆட அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். 

குயிண்டன் டி காக் முன்னாடி இப்படித்தான் இருந்தார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவரது பேட்டிங் மேம்பட்டிருப்பதை பார்க்கமுடிந்தது. பாயிண்ட் திசைக்கும் மிட் ஆஃப் திசைக்கும் இடையே டி காக்கால் அடிக்கமுடியாது என்று பலரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டதன் விளைவாக, இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் அந்த திசையில் நிறைய பவுண்டரிகளை அடித்து அசத்தினார். 

அதேபோல ரிஷப் பண்ட்டும் ஆஃப் திசையில் அடித்து ஆட தீவிர பயிற்சியெடுக்க வேண்டும். ரிஷப் பண்ட்டை 360 டிகிரியிலும் அடித்து ஆடக்கூடிய வீரராக பார்க்க நாம் விரும்புகிறோம். ஆனால் அவர் தற்போது 180 டிகிரியில் மட்டுமே அடித்து ஆடக்கூடிய வீரராக இருக்கிறார். எனவே அவர் ஆஃப் திசையில் ஷாட்டுகளை அடிக்கும் திறனை வளர்க்க வேண்டும். இல்லையெனில் ரொம்ப கஷ்டம் என்று டீன் ஜோன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.