செஞ்சூரியனில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராக்ஸ் அணி, 20 ஓவரில் வெறும் 126 ரன்கள் மட்டுமே அடித்தது. ராக்ஸ் அணியில் டுப்ளெசிஸ், வின்ஸ் என யாருமே சரியாக ஆடவில்லை. ஸ்பார்ட்டான்ஸ் அணி சார்பில் வாண்டெர் மெர்வி அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வெறும் 127 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஸ்பார்ட்டான்ஸ் அணி டிவில்லியர்ஸின் அதிரடியால் 15வது ஓவரிலேயே அந்த இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது ஸ்பார்ட்டான்ஸ் அணி. தொடக்க வீரர்கள் இருவருமே சரியாக ஆடாத நிலையில், மூன்றாம் வரிசையில் இறங்கிய டிவில்லியர்ஸ் அடி வெளுத்துவாங்கினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய டிவில்லியர்ஸ், 37 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 69 ரன்களை விளாசினார். 

அந்த அணியின் கேப்டன் கிளாசனும் தன் பங்கிற்கு அடித்து ஆடி 20 பந்தில் 37 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஸ்பார்ட்டான்ஸ் அணி. 

டிவில்லியர்ஸ் செம ஃபார்மில் அடித்து ஆடிக்கொண்டிருப்பதால், முதல் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி வெல்வதை காண காத்திருக்கும் ஆர்சிபி ரசிகர்கள், டிவில்லியர்ஸின் செம ஃபார்மை கண்டு உற்சாகத்தில் உள்ளனர்.