தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ். 2004ம் ஆண்டிலிருந்து தென்னாப்பிரிக்க அணியில் ஆடிய டிவில்லியர்ஸ், 2018ம் ஆண்டு மே மாதம் திடீரென ஓய்வு அறிவித்தார். தென்னாப்பிரிக்க அணிக்காக 114 ஒருநாள், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் டிவில்லியர்ஸ். 

டிவில்லியர்ஸின் கேப்டன்சியில் 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வெல்லும் என பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அந்த அணியும் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 

டிவில்லியர்ஸ், கிரிக்கெட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜா. பேட்டிங், விக்கெட் கீப்பிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிரட்டக்கூடியவர். தனது தனித்துவமான பேட்டிங்கால், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். மைதானம் முழுவதும் அனைத்து திசைகளிலும் பல வித்தியாசமான ஷாட்டுகளின் மூலம் பந்தை பறக்கவிட்டதால் மிஸ்டர் 360 என அழைக்கப்படுகிறார். 

மிகச்சிறந்த பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்காவை கடந்து, உலகம் முழுதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். குறிப்பாக இந்தியாவில் அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவருகிறார் டிவில்லியர்ஸ்.

ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான டிவில்லியர்ஸ், தனது பவுலிங்கில் மட்டும் எப்போதுமே ஆட்டமிழந்துவிடுவார் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

டிவில்லியர்ஸ் குறித்து பேசியுள்ள ஸ்ரீசாந்த், எனது பவுலிங்கை எதிர்கொள்ளும்போது மட்டும் டிவில்லியர்ஸுக்கு என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்ப பந்துவீசினாலும், எனது பவுலிங்கில் ஆட்டமிழந்துவிடுவார். 2007 டி20 உலக கோப்பையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா ஆடியது. அந்த போட்டியில் எனது பவுலிங்கில் டிவில்லியர்ஸூக்கு எல்பிடபிள்யூ அப்பீல் செய்தேன்; ஆனால் அம்பயர் சைமன் டஃபெல் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே டிவில்லியர்ஸ் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

அதற்கு அடுத்து ஒரு டெஸ்ட் போட்டியில், எனது முதல் பந்திலேயே ஆட்டமிழந்துவிட்டார். டிவில்லியர்ஸ் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். எனவே அவர் ஐபிஎல்லில் ஆட வரும்போது, இதுகுறித்து அவரிடம் கேளுங்கள். ஒருவேளை, அவருக்கு என் முகம் பிடிக்கவில்லையோ என்னவோ தெரியவில்லை. அதனால் தான் எனது முகத்தை பார்க்க பிடிக்காமல் அவுட்டானாரோ என தெரியவில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

2007 டி20 உலக கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றபோது, அந்த அணியில் ஸ்ரீசாந்த் முக்கிய பங்காற்றினார். மொத்தமாக ஸ்ரீசாந்த் 7 போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 5 விக்கெட்டுகளை கடைசி 3 போட்டிகளில் வீழ்த்தினார். அந்த மூன்று போட்டிகளில் இறுதி, அரையிறுதி போட்டி அல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டி. 

அந்த குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணி, 153 ரன்கள் அடித்தது. 154 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியை 116 ரன்களில் சுருட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 23 ரன்களை விட்டுக்கொடுத்து டிவில்லியர்ஸ் மற்றும் மார்க் பவுச்சர் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்ரீசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.