ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவரும் இந்த வேளையில், சிஎஸ்கே அணியில் ரெய்னாவுக்கு மாற்று வீரர் யார் என்பதே பெரும் விவாதமாக உள்ளது.

சிஎஸ்கே அணிக்காக 2008லிருந்து இதுவரை சிஎஸ்கே அணி ஆடிய அனைத்து சீசன்களிலும் அந்த அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நட்சத்திர வீரர் ரெய்னா. சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளையாகவே திகழ்ந்த அவர், இந்த சீசனிலிருந்து திடீரென விலகி, துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்துவிட்டார். அவர் மீண்டும் சிஎஸ்கேவிற்கு ஆட விருப்பம் தெரிவித்திருந்தாலும், கொரோனா அச்சுறுத்தலால் நினைத்தால் போவதும் வருவதுமாக இருக்க முடியாது. எனவே ரெய்னா இந்த சீசனில் ஆடுவது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

எனவே ரெய்னாவுக்கு மாற்றாக, அவர் இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் இறங்குவார், ரெய்னாவுக்கு மாற்று வீரர் யார் என்பதே பெரும் விவாதமாக உள்ளது. சிஎஸ்கேவில் ரெய்னாவின் இடத்தை பூர்த்தி செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார். 

சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, பிராவோ என அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்கள். இவர்களுக்கு இடையே இடது கை பேட்ஸ்மேனாக ரெய்னா ஒருவரே இருந்தார். இடது கை பேட்ஸ்மேன் என்பதன் அடிப்படையிலும், அவரது அனுபவமான அதிரடி பேட்டிங்கிலும் அவரது இடத்தை நிரப்புவது மிகக்கடினம். 

ரெய்னாவுக்கு மாற்று வீரர் குறித்த விவாதம் வலுத்துவரும் நிலையில், பலரும் பல கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். சிஎஸ்கேவின் சீனியர் வீரரான ஷேன் வாட்சன் கூட, ரெய்னாவை போலவே ஸ்பின் பவுலிங்கை திறம்பட ஆடும் அனுபவ வீரரான முரளி விஜய் கூட அந்த வரிசையில் ஆடலாம் என தனது கருத்தை தெரிவித்திருந்தார். ஆனால் புதிதாக ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும் சிஎஸ்கேவிடம் இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான 33 வயதான டேவிட் மாலைனை ஒப்பந்தம் செய்வது குறித்து சிஎஸ்கே அணி ஆலோசித்துவருவதாகவும், அப்படியொரு ஐடியா இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் சொன்னதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

Also Read - ஐபிஎல்லில் 8 அணிகளில் ஆடிய ஒரே வீரர் யார் தெரியுமா..? தகர்க்க முடியாத சாதனையை தன்னகத்தே கொண்ட ஆஸி., வீரர்

இங்கிலாந்து டி20 அணியின் இடது கை அதிரடி வீரரான டேவிட் மாலன் தெளிவாகவும் அதேநேரத்தில் முதிர்ச்சியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் சிறந்த வீரராக திகழ்கிறார். அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து வென்றதற்கு டேவிட் மாலனின் பொறுப்பான, அதிரடி பேட்டிங் முக்கிய காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 43 பந்தில் 66 ரன்களையும் இரண்டாவது போட்டியில் 42 ரன்களையும் அடித்தார். மாலன் சிறப்பாக ஆடிய 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வென்றது. சூழலுக்கு ஏற்ப முதிர்ச்சியாக ஆடுகிறார் மாலன். எனவே இடது கை வீரர் என்பதன் அடிப்படையிலும், அதிரடி பேட்ஸ்மேன் என்ற வகையிலும் ரெய்னாவுக்கு சரியான மாற்றாக மாலன் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Also Read - ஐபிஎல் 2020: அஷ்வினின் ஒற்றை கேள்வியால் பொட்டிப்பாம்பாய் அடங்கிய பாண்டிங்