ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த சீசன் நடக்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் அமீரகம் சென்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வென்றிராத 3 அணிகளில் ஒன்றான கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இந்த சீசனில் பேட்டிங், ஆல்ரவுண்டர், ஃபாஸ்ட் பவுலிங் ஆகியவற்றில் நல்ல கலவையிலான அணியுடன் களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரரும், ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளின் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச், தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகிய சிறந்த வீரர்களை இந்த சீசனில் ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆரோன் ஃபின்ச் செம ஃபார்மில் இருப்பது, ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். ஃபின்ச் இந்த சீசனில் ஆர்சிபி அணியில் ஆடவுள்ளார். இது ஐபிஎல்லில் அவர் ஆடவுள்ள 8வது அணி. இதற்கு முன் 7 அணிகளில் ஆடியுள்ளார் ஃபின்ச். ஐபிஎல்லில் அதிக அணிகளில் ஆடிய வீரர் என்ற சாதனைக்கு ஏற்கனவே சொந்தக்காரரான ஃபின்ச், இந்த சீசனில் ஆர்சிபிக்கு ஆடவுள்ளதன் மூலம், 8 அணிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற தனித்துவ சாதனையை படைக்கவுள்ளார்.

இந்த சாதனையை இனிமேல் யாராவது தகர்க்க முடியுமா என்பது கண்டிப்பாக சந்தேகம்தான். 2010 முதல் ஐபிஎல்லில் ஆடிவரும் ஃபின்ச், கடந்த 10 சீசன்களில் 7 அணிகளில் ஆடியுள்ளார். அவரது 11வது சீசனான இந்த சீசனில் 8வது அணியாக ஆர்சிபியில் ஆடவுள்ளார்.

ஃபின்ச் ஆடிய ஐபிஎல் அணிகளின் பட்டியல்:

2010 - ராஜஸ்தான் ராயல்ஸ் 

2011-2012 - டெல்லி டேர்டெவில்ஸ் 

2013 -  புனே வாரியர்ஸ் இந்தியா

2014 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2015 - மும்பை இந்தியன்ஸ்

2016-2017 - குஜராத் லயன்ஸ்

2018 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2020 -  ஆர்சிபி

2019 ஐபிஎல்லில் ஆரோன் ஃபின்ச் ஆடவில்லை. உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக, ஃபிட்னெஸை பராமரிப்பதற்காக கடந்த சீசனில் ஃபின்ச் ஆடவில்லை.

ஐபிஎல்லின் 8 நிரந்தர அணிகளில் ஃபின்ச் ஆடிராத இரண்டே அணிகள் சிஎஸ்கேவும் கேகேஆரும் தான். அந்த 2 அணிகளிலும் அவரது கெரியர் முடிவதற்குள் ஆடிவிடுவார் என நம்புவோம். 

ஃபின்ச் ஐபிஎல்லில் இதுவரை 75 போட்டிகளில் ஆடி 1737 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல்லில் இதுவரை ஒரு சதம் கூட அடித்திராத ஃபின்ச், 13 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஃபின்ச் நல்ல ஃபார்மில் இருப்பதால், இந்த சீசனில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. அவர் சிறப்பாக ஆடும்பட்சத்தில், அது ஆர்சிபிக்கு நல்லதாக அமையும்.