இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, அயர்லாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டெர்லிங் மற்றும் டெலானி ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரிலேயே பால் ஸ்டெர்லிங்கை வெறும் 2 ரன்களில் வீழ்த்தினார் டேவிட் வில்லி. டேவிட் வில்லி ஓராண்டாக இங்கிலாந்து அணியில் ஆடாத நிலையில், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள அவர், அருமையாக வீசிவருகிறார். 

முதல் ஓவரிலேயே ஸ்டெர்லிங்கை வீழ்த்திய வில்லி, தனது அடுத்த ஓவரில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னியை வீழ்த்தினார். ஹாரி டெக்டாரை சாகிப் மஹ்மூத் டக் அவுட்டாக்க, தனது நான்காவது ஓவரில்(இன்னிங்ஸின் 7வது ஓவர்) டெலானியை 22 ரன்களில் வீழ்த்திய வில்லி, அதற்கடுத்த பந்திலேயே லார்கான் டக்கரை வீழ்த்தினார். 

இதையடுத்து அயர்லாந்து அணி  வெறும் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள டேவிட் வில்லி, 4 ஓவர் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அயர்லாந்து அணி டேவிட் வில்லியின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிவருகிறது. அணியின் சீனியர் வீரர் கெவின் ஓ பிரயனும் காம்பெரும் இணைந்து ஆடிவருகின்றனர்.