கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடையும், பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது. அதனால் ஸ்மித்தின் கேப்டன் பதவியும் வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிபோனது.

தடை முடிந்து திரும்பிய ஸ்மித்தும் வார்னரும் உலக கோப்பையில் ஆடினர். உலக கோப்பையில் வார்னர் அசத்த, ஆஷஸ் தொடரில் ஸ்மித் மிரட்டிவருகிறார். ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவரும் நிலையில், வார்னர் படுமோசமாக சொதப்பிவருகிறார். 

முதல் நான்கு போட்டிகளின் முடிவில், 8 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி வெறும் 74 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார் வார்னர். அதில் 3 டக் அவுட்டுகள், ஒரேயொரு அரைசதம் மற்றும் மூன்று ஒற்றை இலக்க ஸ்கோர். 8 இன்னிங்ஸ்களில் 7ல் ஒற்றை இலக்க ஸ்கோர்(3 டக் அவுட்டுகள் உட்பட).

இந்நிலையில், லண்டன் ஓவலில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 294 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 14 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. வார்னர் 5 ரன்களிலும் ஹாரிஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானதன் மூலம், ஒரே டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ்களில் டக் அவுட்டான முதல் தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் வார்னர். 2, 8, 3, 5, 61, 0, 0, 0, 5 இவைதான் வார்னர் 8 இன்னிங்ஸ்களில் அடித்த ஸ்கோர்.