டி20 உலக கோப்பை: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த டேவிட் வார்னர்
டி20 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்த டேவிட் வார்னர், டி20 உலக கோப்பையில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது நடப்பு டி20 சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மை அணியாக பார்க்கப்பட்டது.
ஆனால் க்ரூப் 1ல் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதே பெரும் சவாலாக உள்ளது. சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
எனவே வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி வெற்றி கட்டாயத்தில் இன்று அயர்லாந்துக்கு எதிராக ஆடிவருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஜெயித்துவிடும். கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கில் வலுவான அணி. எனவே அந்த அணிக்கு எதிராக வெற்றி பெறுவது சவாலான காரியமே. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுக்கும் இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.
ஆஸ்திரேலிய அணி அயர்லாந்து, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றாலும், இங்கிலாந்து போட்டி முடிவுகளை பொறுத்தே ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு அமையும்.
ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறினாலும், சொந்தமண்ணில் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் வார்னர், மேக்ஸ்வெல் ஆகிய வீரர்கள் நன்றாக ஆடியாக வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரரான டாப் ஆர்டர் வீரர் டேவிட் வார்னர் ஃபார்மில் இல்லை.
நியூசிலாந்துக்கு எதிராக 5 ரன்னிலும், இலங்கைக்கு எதிராக 11 ரன்னிலும் ஆட்டமிழந்த வார்னர், இன்று அயர்லாந்துக்கு எதிராக வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இன்றைய போட்டியில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் வார்னர்.
டி20 உலக கோப்பையில் இதுவரை மொத்தமாக 14 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார் வார்னர். டி20 உலக கோப்பையில் தலா 13 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டான கிறிஸ் கெய்ல் மற்றும் ஷாஹித் அஃப்ரிடி ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான டேவிட் வார்னர் நன்றாக ஆடினால்தான் அந்த அணியால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை உருவாக்கமுடியும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி டி20உலக கோப்பையை வென்றபோது தொடர் நாயகன் விருதை வென்றவர் வார்னர். எனவே ஆஸ்திரேலிய அணி ஜொலிக்க வேண்டுமானால் வார்னர் ஃபார்முக்கு வந்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் பெரிய ஸ்கோர் செய்யக்கூடிய வீரர் வார்னர். எனவே வார்னர் ஃபார்முக்கு வருவார் என்று ஆஸ்திரேலிய அணி மட்டுமல்லாது ரசிகர்களும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.