இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் அடித்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நேற்று(ஜூன்23) தொடங்கி நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். வில் யங் 20 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 31 ரன்னிலும், டெவான் கான்வே 26 ரன்னிலும் என கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் இவர்கள் எல்லாம் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க - TNPL 2022: நடுவிரலை காட்டி அநாகரிமாக நடந்துகொண்ட ஜெகதீசன்..! தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்
ஹென்ரி நிகோல்ஸ் 19 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக வித்தியாசமான முறையில் பரிதாபமாக ஆட்டமிழக்க, 123 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. அதன்பின்னர் டேரைல் மிட்செலும் டாம் பிளண்டெலும் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 120 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த பிளண்டெல் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய டேரைல் மிட்செல் சதமடித்தார். ஆனால் அவர் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் அவரது சதத்தின் உதவியுடன் 329 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஜாக் லீச் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
