உமர் அக்மல் மீது காட்டப்படும் கருணையும் அக்கறையும், தான் ஒரு இந்து என்பதால் தன் மீது காட்டப்படுவதில்லை என பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். 

அனில் தல்பாட்டுக்கு அடுத்து பாகிஸ்தான் அணியில் ஆடிய இரண்டாவது இந்து வீரர் டேனிஷ் கனேரியா தான். கனேரியா 2000ம் ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியில் ஆடினார். 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2012ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கிய அவருக்கு வாழ்நாள் தடை பெற்ற கனேரியா, அதன்பின்னர் கிரிக்கெட் ஆடவேயில்லை. 

தான் ஒரு இந்து என்பதால், பாகிஸ்தான் அணியில் ஆடிய காலக்கட்டத்தில் தன்னை மட்டும் சில வீரர்கள் பாரபட்சமாக நடத்தியதாக பகிரங்க குற்றச்சாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்வைத்திருந்தார் டேனிஷ் கனேரியா. அவர் சொன்னது உண்மைதான் என அவருக்கு ஆதரவாக ஷோயப் அக்தரும் குரல் கொடுத்திருந்தார். 

அதன்பின்னர், கங்குலி ஐசிசி தலைவரானதும், தன் மீதான வாழ்நாள் தடையை நீக்குவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், டேனிஷ் கனேரியாவுக்கு சூதாட்ட புகாரில் வாழ்நாள் தடை விதித்துள்ளது. தன் மீதான தடையை நீக்கக்கோரி போராடியும் மன்றாடியும் வருகிறார் டேனிஷ் கனேரியா.

டேனிஷ் கனேரியா மீதான வாழ்நாள் தடை, அவர் மன்றாடியும் குறைக்கப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை. ஆனால், சூதாட்டத்தில் ஈடுபட தன்னை ஏஜெண்டுகள் அணுகியது குறித்து தெரியப்படுத்தாத குற்றத்திற்காக 3 ஆண்டுகள்(36 மாதங்கள்) தடை விதிக்கப்பட்டிருந்த உமர் அக்மல் மீதான தடை 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

தன் மீதான தடையை குறைப்பது குறித்து கொஞ்சம் கூட பரிசீலிக்காத, நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உமர் அக்மல் மீதான தடையை மட்டும் குறைத்ததால் வருத்தமும் அதிருப்தியும் அடைந்த டேனிஷ் கனேரியா, அதற்கு தான் ஒரு இந்து என்பதுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டேனிஷ் கனேரியா, என் மீது மட்டும் சகிப்பின்மை கொள்கை கடைபிடிக்கப்படுகிறது. மற்றவர்கள் மீதெல்லாம் அப்படியில்லை. எனக்கு என்ன காரணத்திற்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. கொள்கை முடிவுகள், சாதி, மதம், பின்னணி, நிறம் ஆகிய பேதங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. நான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன் என்று டேனிஷ் கனேரியா பதிவிட்டுள்ளார்.