ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதிபெறும் இடத்தில் உள்ளன.

இந்த சீசனில் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் சோதனையாக அமைந்தது. முதல் 6 போட்டிகளிலும் தோற்று அப்போதே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட ஆர்சிபி அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. 

முதல் 6 போட்டிகளில் ஆர்சிபி அணி பெரிதும் சார்ந்துள்ள கோலி, டிவில்லியர்ஸும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அந்த அணி பெரும் எதிர்பார்ப்புடன் ஏலத்தில் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயரும் சரியாக ஆடவில்லை. பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினாலும் பவுலிங் படுமோசமாக இருந்தது. 

அந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர்நைல் பாகிஸ்தான் தொடரை முடித்துவிட்டு ஆர்சிபி அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் என்று கூறி கழண்டுகொண்டார். 
அதுவே அந்த அணிக்கு பெரிய இழப்பாக இருந்தது. ஏற்கனவே ஃபாஸ்ட் பவுலர்கள் சரியாக இல்லாத நிலையில், குல்ட்டர்நைலும் கைவிட்டார். டிம் சௌதி தொடர்ச்சியாக சொதப்பினார். உமேஷ், சிராஜ் ஆகியோரும் படுமோசம். நவ்தீப் சைனி ஒருவர் தான் அந்த அணிக்கு நம்பிக்கையளித்தார். அதனால் ஒரு ஃபாஸ்ட் பவுலர் தேவை என்பதால் குல்ட்டர்நைலுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ஸ்டெயினை எடுத்தனர். 

ஸ்டெயின் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக வீசினார். தொடர்ச்சியாக 2 போட்டிகளில் ஆடி வெற்றி பெற்று கொடுத்த நிலையில், அவரும் தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இப்போதுதான் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில் ஸ்டெயின் தொடரிலிருந்து பாதியில் விலகியிருப்பது அந்த அணிக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. அவர் ஆடாத பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கூட டிம் சௌதியின் பவுலிங்கை பஞ்சாப் வீரர்கள் வெளுத்து வாங்கிவிட்டனர். 

ஸ்டெயின் இல்லாத இடத்தை யாரை வைத்து எப்படி ஆர்சிபி அணி ஈடுகட்டப்போகிறது என்பதை பார்க்க வேண்டும்.