டி20 உலக கோப்பை: கர்டிஸ் கேம்பர் காட்டடி அரைசதம்.. ஸ்காட்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் ஸ்காட்லாந்து நிர்ணயித்த 177 ரன்கள் என்ற மிகச்சவாலான இலக்கை, கர்டிஸ் கேம்பரின் அதிரடி அரைசதத்தால் 19 ஓவரிலேயே அடித்து அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.
முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணியும், ஜிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த அயர்லாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இதையும் படிங்க - 2023 ஆசிய கோப்பை: இந்திய அணி பாகிஸ்தானுக்கு போகாது.. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டவட்ட அறிவிப்பு
முதலில் பேட்டிங் ஆடிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 55 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவிக்க, கேப்டன் பெரிங்டன் 27 பந்தில் 37 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 176 ரன்களை குவித்தது.
177 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டர்லிங்(8), பால்பிர்னி (14), டக்கர் (20), ஹாரி டெக்டார்(14) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 9.2 ஓவரில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அயர்லாந்து அணி.
அதன்பின்னர் கர்டிஸ் கேம்பர் ஸ்காட்லாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து ஜார்ஜ் டாக்ரெலும் அதிரடியாக பேட்டிங் ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய கர்டிஸ் கேம்பர், 32 பந்தில் 72 ரன்களை குவிக்க, 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பும்ராவிற்கு நிகரான மாற்று வீரர் ஷமி இல்ல.. சுரேஷ் ரெய்னா அதிரடி
சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான தகுதிச்சுற்று க்ரூப் பி புள்ளி பட்டியலில் ஜிம்பாப்வே அணி முதலிடத்திலும், ஸ்காட்லாந்து அணி 2ம் இடத்திலும் அயர்லாந்து 3ம் இடத்திலும் உள்ளன. இந்த பிரிவில் அனைத்து அணிகளுக்குமான சூப்பர் 12 சுற்று வாய்ப்பு ஓபனாகவே உள்ளது.