ருதுராஜ் கெய்க்வாட் எவ்வளவு சொதப்பினாலும், அவர் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரர் என்பதால் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனுக்கு முன்பாக தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜடேஜாவின் கேப்டன்சியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனின் தொடக்கம் சரியாக அமையவில்லை.
முதல் போட்டியில் கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடமும், 3வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடமும் தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் தான் முக்கிய காரணம்.
சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக அபாரமான பங்களிப்பை கடந்த காலங்களில் வழங்கிய ஃபாஃப் டுப்ளெசிஸை சிஎஸ்கே அணி மிஸ் செய்கிறது. மேலும் கடந்த சீசனில் அபாரமாக விளையாடி 635 ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் 3 போட்டிகளிலும் சேர்த்தே மொத்தமாக 2 ரன் மட்டுமே அடித்துள்ளார். கேகேஆருக்கு எதிராக டக் அவுட்டான ருதுராஜ், லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தலா ஒரு ரன் மட்டுமே அடித்தார்.
இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் டுவிட்டரில் ருதுராஜை கலாய்ப்பதுடன், நக்கலடித்து மீம்ஸ்களும் தெறிக்கவிடுகின்றனர்.
ஆனால் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா மற்றும் அணி நிர்வாகத்தினர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆதரவளிக்கின்றனர். ருதுராஜ் குறித்து பேசிய கேப்டன் ஜடேஜா, ருதுராஜ் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவர் திறமையான வீரர் என்பது நமக்கு தெரியும். விரைவில் ஃபார்முக்கு வந்து நன்றாக ஆடுவார். அவருக்கு நாங்கள் ஆதரவளிப்பது அவசியம் என்றார் ஜடேஜா. சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதனும் ருதுராஜுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
