ஐபிஎல் 15வது சீசனில் ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படவுள்ள நிலையில், அதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்த ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனான தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டு, ஜடேஜாவை கேப்டனாக்கினார்.
தோனி வழிநடத்திய அணியின் கேப்டன்சியை அவருக்கு அடுத்ததாக ஏற்பது என்பது சாதாரண விஷயமல்ல; மிகக்கடினமான விஷயம். அந்த கஷ்டமான டாஸ்க்கை ஜடேஜா ஏற்று செயல்படவுள்ளார்.
இன்று ஐபிஎல் 15வது சீசன் தொடங்கவுள்ளநிலையில், இன்று நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இந்நிலையில், ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பத்ரிநாத், ஜடேஜாஅருமையான பவுலர். கடந்த 2 ஆண்டுகளில் பேட்டிங்கிலும் நிறைய மேம்பட்டிருக்கிறார். அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என சிறந்த ஆல்ரவுண்டராக, பக்கா 3டி பிளேயராக இருந்தார்.
இப்போது கேப்டன்சியையும் சேர்த்து 4டி கிரிக்கெட்டராக உருவெடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை எந்த அணியையும் வழிநடத்தியதேயில்லை. முதல் தர கிரிக்கெட்டில் கூட ஜடேஜா கேப்டன்சி செய்ததில்லை. எனவே அவர் கேப்டனாக எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கவேண்டும். ஹாட்ஸ்பாட் ஃபீல்டிங் இடத்தில் ஜடேஜா ஃபீல்டிங் செய்வார். பவுலிங்கும் வீச வேண்டும், பேட்டிங்கும் ஆடவேண்டும்; இப்போது அத்துடன் சேர்த்து கேப்டன்சியும் செய்ய வேண்டும் என்று பத்ரிநாத் கூறியுள்ளார்.
