IPL 2023: பெங்களூருவில் மேக்ஸ்வெல்லின் சிக்ஸர் மழை வீண்..! பரபரப்பான போட்டியில் RCB-ஐ வீழ்த்தி CSK வெற்றி
ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி - சிஎஸ்கே இடையேயான போட்டி. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படே, வைன் பார்னெல், முகமது சிராஜ், வைஷாக் விஜய்குமார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, மஹீஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே.
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். 2வது விக்கெட்டுக்கு டெவான் கான்வே மற்றும் அஜிங்க்யா ரஹானே இணைந்து அடித்து ஆடி 74 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ரஹானே 20 பந்தில் 37 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபேவும் அதிரடியாக ஆடினார். கான்வே மற்றும் துபே ஆகிய இருவரும் அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். டெவான் கான்வே 45 பந்தில் 83 ரன்களையும், துபே 27 பந்தில் 52 ரன்களையும் குவித்தனர். கான்வே, துபேவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 226 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.
227 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும், மஹிபால் லோம்ரார் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஆனால் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸும், மேக்ஸ்வெல்லும் இணைந்து காட்டடி அடித்து இருவருமே அரைசதம் அடித்தனர்.
3வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸ் - மேக்ஸ்வெல் இணைந்து 126 ரன்களை குவித்தனர். பெங்களூருவில் சிக்ஸர் மழை பொழிந்த மேக்ஸ்வெல், 36 பந்தில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸும் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்கும் 14 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய பிரபுதேசாய் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தாலும் கூட, ஆர்சிபி அணியால் 20 ஓவரில் 218 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 8 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.