தென்னாப்பிரிக்க அணி கடந்த 2 ஆண்டுகளாக 3 ஃபார்மட்டிலும் படுமோசமாக ஆடிவருகிறது. அணியின் நட்சத்திர வீரர்களான டிவில்லியர்ஸ், ஸ்டெய்ன், ஆம்லா ஆகியோர் அடுத்தடுத்து மிகக்குறுகிய இடைவெளியில் ஓய்வு அறிவித்ததால், அனுபவம் வாய்ந்த தரமான அந்த வீரர்கள் இல்லாமல், அவர்களது இடத்தை உடனடியாக நிரப்ப முடியாமல் திணறிவரும் தென்னாப்பிரிக்க அணி, தொடர்ச்சியாக படுதோல்விகளை சந்தித்துவருகிறது. 

உலக கோப்பையில் டுப்ளெசிஸ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி படுமோசமாக சொதப்பி லீக் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் இந்திய அணியிடம் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. அந்த தொடரில் டி20 அணிக்கு டி காக் தான் கேப்டனாக செயல்பட்டார். 

தென்னாப்பிரிக்க அணியை மேம்படுத்தும் நோக்கில் புதிய தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சரும், கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் இயக்குநராக க்ரேம் ஸ்மித்தும், பேட்டிங் பயிற்சியாளராக ஜாக் காலிஸும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் படுமோசமாக ஆடி படுதோல்வியடைந்துள்ளது தென்னாப்பிரிக்கா. 

Also Read - ஒருநாள் அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் அறிமுகம்.. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, அடுத்த 2 போட்டிகளிலும் மிகப்பெரிய தோல்விகளை அடைந்துள்ளது. 2வது போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த படுதோல்விகள் கண்டிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு மரண அடி.

எனவே இளம் வீரர்களை கொண்ட அந்த அணி விரைவில் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வெற்றிகளை பெறுவது அவசியம். இந்நிலையில், கேப்டன் டுப்ளெசிஸ், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கு பின்னர் ஓய்வுபெறும் முனைப்பில் இருக்கிறார். அதனால் அவர் கண்டிப்பாக அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் ஆடுவது சந்தேகம் தான். எனவே ஒருநாள் அணி புதிய கேப்டனின் தலைமையில் வலுவாக உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியிலிருந்து டுப்ளெசிஸ் நீக்கப்பட்டு, விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் டுப்ளெசிஸ், டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஃபார்மட்டிலுமே சரியாக பேட்டிங்கும் ஆடுவதில்லை. 10ல் ஒரு இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் ஆடுகிறாரே தவிர மற்ற இன்னிங்ஸ்களில் சொதப்பிவிடுகிறார். 

Also Read - அண்டர் 19 உலக கோப்பையில் விக்கெட்டே போகாமல் அபார வெற்றி பெற்ற இந்தியா.. மொத்த மேட்ச்சும் 28 ஓவரில் முடிஞ்சுபோச்சு

டிவில்லியர்ஸ் மீண்டும் ஒருநாள் அணியில் ஆட விரும்புவதாக அறிவித்துள்ள நிலையில், டுப்ளெசிஸ் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டி காக் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி, உலக கோப்பையை வென்று ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கெத்தாகவும் வலுவாகவும் வலம்வரும் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா, வாண்டெர் டசன், டேவிட் மில்லர், ஜேஜே ஸ்மட்ஸ், ஃபெலுக்வாயோ, லூதோ சிபாம்லா, லுங்கி இங்கிடி, ஷாம்ஸி, சிசாண்டா மகாலா, ஃபார்டியூன், பியூரன் ஹென்ரிக்ஸ், ஜான்மேன் மாலன், கைல் வெரெய்ன்.