ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்பதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் தொடர் வாய்ப்புகள் வழங்கியது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், அதற்கடுத்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் என தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே ரிஷப் பண்ட் சொதப்பினார். 

எனவே ரிஷப் பண்ட் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்கள், தோனி.. தோனி.. என கத்தி, தோனியை மிஸ் செய்வதை உணர்த்தினர். ஆனால் இளம் வீரரான ரிஷப் பண்ட்டை, தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், அவரை கிண்டலடிக்காமல் அவருக்கு ஆதரவளிக்குமாறும் கேப்டன் கோலி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை கிண்டலடித்தனர். திருவனந்தபுரத்தில் நடந்த டி20 போட்டியில் கூட, தோனி.. தோனி என ரசிகர்கள் கூச்சலிட்டனர். அப்போது, ரசிகர்களை நோக்கி கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், தோனியின் கோட்டையான சென்னையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி 71 ரன்களை குவித்தார். இந்திய அணியின் முக்கியமான வீரர்களான ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்த போதிலும், ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக ஆடி, தனது திறமையை நிரூபித்தார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்டின் சிறப்பான பேட்டிங்கை ஊக்குவிக்கும் விதமாக சேப்பாக்கத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், ரிஷப் பண்ட்டின் பெயரை உச்சரித்து அவரை ஊக்கப்படுத்தினர். 

இதுதான் ரசிகர்கள்.. சரியாக ஆடாதபோது கிண்டலடித்து சீண்டும் அதே ரசிகர்கள், நன்றாக ஆடினால் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். இதையும் படிங்க: கோலியின் அதிகப்பிரசங்கித்தனம் கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு