கொரோனாவால் உலகம் முழுதும் 54 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

சாமானியர்கள் முதல் உலக தலைவர்கள் வரை பாரபட்சமன்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கிவருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் டௌஃபிக் உமருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் கால்பந்து வீரர்கள் பலருக்கு கொரோனா உறுதியானது. ஆனால் கிரிக்கெட் வீரர்களில் பிரபலமானவர் யாருக்குமே இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில், டௌஃபிக் உமர் தான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் கிரிக்கெட் வீரர். 

டௌஃபிக் உமர், பாகிஸ்தான் அணியில் 2001ம்  ஆண்டு அறிமுகமாகி 2014ம் ஆண்டுவரை ஆடினார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான அவர், அந்த அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கவில்லை. அவர் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணிக்காக ஆடவில்லை.

பாகிஸ்தான் அணிக்காக 43 டெஸ்ட் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே டௌஃபிக் உமர் ஆடியுள்ளார். இம்ரான் நசீர், சல்மான் பட் ஆகியோருடன் பல சிறந்த பார்ட்னர்ஷிப்புகளை அமைத்து ஆடியுள்ளார் டௌஃபிக் உமர். 2003 உலக கோப்பையிலும் அவர் ஆடினார். அந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், சயீத் அன்வருடன் தொடக்க வீரராக இறங்கி 22 ரன்கள் அடித்து ஜாகீர் கானின் பந்தில் ஆட்டமிழந்தார். 

பாகிஸ்தானில் இதுவரை 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டௌஃபிக் உமருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. எனவே அவர் வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.