காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வெறும் 99 ரன்களுக்கு சுருட்டி, 100 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட நிலையில், அந்த போட்டியில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியும் பார்படாஸுக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் தோல்வியடைந்தது. எனவே இந்தியா - பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி கட்டாயத்தில் களமிறங்கின.
காமன்வெல்த்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் போட்டி பர்மிங்காமில் பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டு, 3.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் தாமதமானது. 3.55 மணிக்கு டாஸ் போடப்பட்டு 4.10 மணிக்கு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழை குறுக்கீட்டால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இந்திய மகளிர் அணி:
ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ஸ்னே ராணா, மேக்னா சிங், ரேணுகா சிங்.
பாகிஸ்தான் மகளிர் அணி:
இராம் ஜாவேத், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), ஒமைமா சொஹைல், பிஸ்மா மரூஃப் (கேப்டன்), ஆலியா ரியாஸ், ஆய்ஷா நசீம், கைனத் இம்டியாஸ், ஃபாத்திமா சனா, துபா ஹசன், டயானா பைக், அனம் அமின்.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 32ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற அனைவருமே மிக சொற்பமான ரன்களுக்கு ஆட்டமிழக்க, 18 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.
இந்திய அணி சார்பில் ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணி 100 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிவருகிறது.
