சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது லீக் போட்டியை நடிகர்கள் வெங்கடேஷ், சதீஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை 5ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் விளையாடி ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், டேவிட் வார்னர் 41 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்னும் எடுத்தனர். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். மேலும், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 1.6 ஓவர்களில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் விராட் கோலி தனது 67ஆவது அரைசதத்தை அடித்தார். அதுமட்டுமின்றி அவர் 38 ரன்கள் எடுத்ததன் மூலமாக 3ஆவது வரிசையில் களமிறங்கி 11,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.
எனினும், கோலி கடைசி வரை இருந்து இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று கேஎல் ராகுல் ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 16ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும், அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். கடைசியாக இந்திய அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக கேஎல் ராகுல் 115 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரி உள்பட 97 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலமாக 2023 உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி 1987, 1996 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தது. இதற்கு இந்திய அணி இன்றைய போட்டியின் மூலமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளனர். அதில், தெலுங்கு நடிகர் டக்குபதி வெங்கடேஷ், நகைச்சுவை நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலரும் நேரில் பார்த்து ரசித்துள்ளனர்.
