பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் காலண்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி லாகூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, குஷ்தில் ஷாவின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 187 ரன்கள் அடித்தது. 

முல்தான் அணியின் தொடக்க வீரர்கள் மொயின் அலி மற்றும் அஷ்ரஃப் முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷான் மசூத் 29 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நான்காம் வரிசையில் இறங்கிய ரவி போபாரா, மந்தமாக பேட்டிங் ஆடி 36 பந்தில் வெறும் 33 ரன்கள் மட்டுமே அடித்தார். 

அவரது மந்தமான பேட்டிங்கால் முல்தான் சுல்தான்ஸ் அணி, 13 ஓவரில் வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. அதன்பின்னர் களத்திற்கு வந்த குஷ்தில் ஷா, அடுத்த சில ஓவர்களில் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய அவர், லாகூரில் ரசிகர்களே இல்லாத ஸ்டேடியத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தினார். 

அதிரடியாக ஆடிய குஷ்தில் ஷா, வெறும் 29 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாச, முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது. 

188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய லாகூர் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் கிறிஸ் லின் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஃபகார் ஜமான் 36 பந்தில் 57 ரன்களை விளாசி 9வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். லின் - ஜமானின் அதிரடியால் 9 ஓவரிலேயே லாகூர் அணி 100 ரன்களை எட்டிவிட்டது. 

Also Read - என் கெரியரில் நான் பண்ண தரமான 2 சம்பவம் இதுதான்.. இஷாந்த் சர்மா அதிரடி

அதன்பின்னரும் அதிரடி பேட்டிங்கை தொடர்ந்த கிறிஸ் லின், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விளாசி சதமடித்தார். 55 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 113 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று லாகூர் அணியை வெற்றி பெற செய்தார் லின். கிறிஸ் லின்னின் காட்டடியால் 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது லாகூர் அணி.