IPL 2023: கிறிஸ் கெய்லின் ஐபிஎல் சாதனையை முறியடித்த விராட் கோலி..! ஓய்வு முடிவை திரும்பப்பெறும் கெய்ல்
ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை விராட் கோலி முறியடித்த நிலையில், அதற்கு கெய்ல் ரியாக்ட் செய்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். சர்வதேச 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி ஐபிஎல்லிலும் பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்துவருகிறார். பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு ஆர்சிபிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை கோலி வழங்கினாலும், ஆர்சிபியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாதது வருத்தம்தான்.
ஐபிஎல் 16வது சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது ஆர்சிபி அணி. முதல் 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றிருந்த ஆர்சிபி அணி, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான கடைசி போட்டியில் ஜெயித்தால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம் என்ற வெற்றி கட்டாயத்துடன் குஜராத்தை எதிர்கொண்டது.
இதற்கு முந்தைய போட்டியில் சதமடித்திருந்த விராட் கோலி, குஜராத்துக்கு எதிரான இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்தார். 61 பந்தில் 101 ரன்களை குவித்தார் கோலி. அவரது அபாரமான சதத்தால் 20 ஓவரில் 197 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. விராட் கோலிக்கு பதிலடியாக ஷுப்மன் கில்லும் சதமடிக்க, 19.1 ஓவரிலேயே இலக்கை அடித்து குஜராத் அணி வெற்றி பெற ஆர்சிபி தொடரைவிட்டு வெளியேறியது.
விராட் கோலி இந்த சீசனில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்து அசத்தினார். இந்த சதம் ஐபிஎல்லில் கோலியின் 7வது சதம் ஆகும். இதன்மூலம், ஐபிஎல்லில் அதிக சதமடித்த கிறிஸ் கெய்லின் (6) சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் கோலி.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
தனது ஐபிஎல் சத சாதனையை கோலி முறியடித்தது குறித்து பேசிய கிறிஸ் கெய்ல், விராட் கோலி அபாரமாக ஆடினார். இந்த சீசனில் விராட்டும் ஃபாஃபும் சிறப்பாக ஆடினார்கள். விராட் கோலி யுனிவர்ஸ் பாஸின் சாதனையை முறியடித்துவிட்டார். நான் ஓய்விலிருந்து திரும்பவந்து அடுத்த ஆண்டு உன்னை பார்த்துக்கொள்கிறேன் விராட் என்று விளையாட்டாக பேசினார் கிறிஸ் கெய்ல்.