உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அணியை முதல் ஆளாக அறிவித்தது நியூசிலாந்து. இதையடுத்து ஆஸ்திரேலியாவும் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்தது. 

இந்நிலையில், சற்றுமுன் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் சிக்கலாக பார்க்கப்பட்ட நான்காம் வரிசைக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். ஆனாலும் தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளனர். 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதுதான் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டதற்கான காரணம். தோனி ஆடாத பட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால், மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்குவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதுதான். எனினும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்தது பெரிய விஷயம்தான். 

அனைவரும் ரிஷப் பண்ட்டையே எதிர்பார்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், மாற்று விக்கெட் கீப்பர் விஷயத்தில் நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியில் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த நல்ல விக்கெட் கீப்பர் என்ற முறையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம். தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் களமிறக்கப்படுவார். அப்படியிருக்கையில், முக்கியமான தொடரில் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்வது அவசியம். அந்த காரணத்திற்காகத்தான் தினேஷ் கார்த்திக்கை எடுத்தோம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.