ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் அடித்தாலும் வாய்ப்பில்லை ராஜா – கவலையில் சட்டீஸ்வர் புஜாரா!
இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சொதப்பிய நிலையில் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த சட்டேஷ்வர் புஜாரா ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் அதிக ரன்க எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியில் இடம் பிடிக்க ரஞ்சி டிராபி கிரிக்கெட் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர் ரஞ்சி டிராபி தொடர். இந்த தொடரில், தற்போது அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் சௌராஷ்டிரா அணியைச் சேர்ந்த புஜாரா முதலிடத்தில் இருக்கிறார்.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில், புஜாராவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் சௌராஷ்டிரா அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இதில் 5 போட்டிகளில் ஒரு இரட்டை சதம், ஒரு அரைசதம் உள்பட புஜாரா 444 ரன்கள் குவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து கோவா வீரர் பிரபுதேசாய் 3 போட்டிகளில் விளாயாடி 2 சதம் உள்பட 386 ரன்கள் குவித்துள்ளார். அதன் பிறகு அசாம் வீரர் ரியான் பராக் 3ஆவது இடத்தில் இருக்கிறார் ரியான் பராக் 3 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உள்பட 378 ரன்கள் குவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து 4ஆவது இடத்தில் ரிக்கி புயி 3 போட்டிகளில் விளையாடி 2 சதம் உள்பட 372 ரன்கள் குவித்துள்ளார்.
கடைசியாக 5ஆவது இடத்தில் கர்நாடகா வீரரான தேவ்தத் படிக்கல் இடம் பெற்றுள்ளார். இவர் 3 போட்டிகளில் விளையாடி 369 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 சதங்கள் அடங்கும். இதே போன்று பவுலிங்கில் பாண்டிச்சேரி அணியைச் சேர்ந்த கௌரவ் யாதவ் 23 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து ஹித்தேஷ் வாலுஞ்ச் 19 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும், பார்கவ் பாத் 18 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.