தங்கள் அணியின் செல்லப்பிள்ளையான ட்வைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கு ஐபிஎல் மெகா ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி. 

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 

தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், வார்னரை ரூ.6.25 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், டிரெண்ட் போல்ட்டை ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸும் எடுத்தன.

ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிக்கும் எண்ணத்தில் அவரை ரூ.12.25 கோடிக்கு கேகேஆர் அணி எடுத்தது. ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது.

ஏலம் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அனைத்து அணிகளும் அதிக தொகைகளை கொடுத்து வீரர்களை பரபரப்பாக எடுத்துவரும் நிலையில், வலுவான கோர் செட்டப்பை கொண்ட சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வழக்கம்போல நிதானம் காட்டிவருகின்றன. சன்ரைசர்ஸ் அணி இளம் வீரர்களை டார்கெட் செய்து அமைதி காத்துவருகிறது.

தங்களுக்கு யார் யார் வேண்டும், என்ன வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக இருக்கும் சிஎஸ்கே அணி, இந்த மெகா ஏலத்தில் முதல் வீரராக ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்தது.

டேவிட் வார்னர், டி காக் ஆகியோர் மீதும் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே அணி, பின்னர் பின்வாங்கியது. தங்கள் அணியின் செல்லப்பிள்ளையும், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான ட்வைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவரை எடுக்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டியபோதிலும், சிஎஸ்கே அணி அவரை விட்டுக்கொடுக்காமல் ரு.4.40 கோடிக்கு எடுத்தது.

2011ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிவரும் ட்வைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்துவருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார் பிராவோ. இப்போதும் டெத் ஓவர்களை சாமர்த்தியமாக வீசி எதிரணியை திணறடித்து வெற்றிக்கு சாத்தியமற்ற போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தவல்ல ஆட்டக்காரர் பிராவோ. கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரரும் ஆவார். எனவே அவரை விட்டுக்கொடுக்க விரும்பாத சிஎஸ்கே அணி, அவருக்கு 38 வயது ஆகிவிட்டபோதிலும், ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.