இந்தியாவிலேயே சென்னை தோசைகள் தான் பெஸ்ட் - ஷாருக் கான்!
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த அணியின் அதிரடி வீரரான ஷாருக்கான் இந்தியாவிலேயே சென்னை தோசைகள் தான் பெஸ்ட் என்று கூறியுள்ளார்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 41ஆவது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சென்னை அணியில் கான்வே 92 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ருத்துராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் வெளியேறினார். ஷிவம் துபே 28 ரன்கள் சேர்த்தார். மொயீன் அலி 10 ரன்னும், ஜடேஜா 12 ரன்னும் எடுத்தனர். கடைசியாக வந்த தோனி 2 சிக்ஸர்கள் விளாச இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரரர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ப்ராப்சிம்ரன் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். லியாம் லிவிங்ஸ்டன் 40 ரன்களில் ஆட்டமிழதார். கடைசியாக வந்த ஷாருக்கான் மற்றும் ஷிகந்தர் ராஸா இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் ரன் ஏதும் இல்லை. 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் 2 ரன்னும் எடுக்கப்பட்டது. கடைசியாக ஒரு பந்துக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராஸா 3 ரன் எடுக்கவே பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என்னதான் கடைசில வந்தாலும் சிக்ஸருக்கு மட்டும் பஞ்சமே இருக்காது: தோனியின் 20ஆவது ஓவர் ரெக்கார்டு!
இந்த வெற்றியைத் தொடர்ந்து வரும் 3 ஆம் தேதி மொஹாலியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் எதிரான போட்டி நடக்கிறது. இதற்காக பஞ்சாப் வீரர்கள் விமானம் மூலமாக அங்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில், பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ஷாருக் கான், இந்தியாவிலேயே சென்னையினுடைய தோசைகள் தான் பெஸ்ட் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷாருக் கான், இதுவரையில் விளையாடிய 28 போட்டிகளில் மொத்தமாக 356 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் முறையே 11 (நாட் அவுட்), 11, 4, 22, 23 (நாட் அவுட்), 7, 0 (நாட் அவுட்), 6, 2 (நாட் அவுட்) என்று மொத்தமாக 86 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.