உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்து நிற்கிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. 

உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒருசில இடங்களுக்கான தேர்வு மட்டுமே இனிமேல் செய்யப்பட உள்ளது. 4ம் வரிசை வீரருக்கான தேடல் இன்னும் முடிந்தபாடில்லை. ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய தொடரில் சிறப்பாக ஆடிய ராயுடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடாதை அடுத்து கடைசி இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

கடைசி போட்டியில் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் அவர் வழக்கம்போலவே சொதப்பினார். ரிசர்வ் விக்கெட் கீப்பர் தேர்வாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் சொதப்பியதை அடுத்து அவர் அழைத்து செல்லப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல நான்காம் வரிசைக்கான வீரரும் உறுதி செய்யப்பட வேண்டும். 

இப்படியாக இன்னும் சில சிக்கல்கள் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, உலக கோப்பைக்கான எங்களது தேவையை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டோம். வீரர்கள் உலக கோப்பையில் அவர்களின் ரோலை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம். ஒரே ஒரு இடம் குறித்து மட்டும் விவாதித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார். 

அந்த ஒரு இடம் நான்காவது வரிசை வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விஜய் சங்கர், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் அணியில் இருக்கும் பட்சத்தில் ஆடும் லெவனில் யார் யார் எடுக்கப்படுவார் என்ற கேள்வி உள்ளது. மிடில் ஆர்டரில் நன்றாக ஆடும் விஜய் சங்கரை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான வாய்ப்பு கூட உள்ளது. ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகிய 2 ஆல்ரவுண்டர்களுமே அணியில் எடுக்கப்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்தால், இருவருமே ஆடவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

விஜய் சங்கர் நான்காம் வரிசையிலும் ஹர்திக் பாண்டியா வழக்கம்போல 7ம் வரிசையிலும் இறக்கப்படலாம். அணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக கேப்டன் கோலி கூறியிருக்கும் நிலையில், ரிஷப் பண்ட் சரியாக ஆடவில்லை; அதனால் தினேஷ் கார்த்திக்கை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொல்கிறாரா? அல்லது ரிஷப் பண்ட்டை உறுதி செய்துவிட்டதாக சொல்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் ராயுடுவை ஓரங்கட்ட திட்டமிட்டிருப்பது அரசல் புரசலாக தெரிகிறது.