இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களையும் வென்று வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேவேளையில், கடந்த ஆண்டு அடைந்த ஒருநாள் தொடர் தோல்வி மற்றும் டி20 ஒயிட்வாஷ் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் நியூசிலாந்து உள்ளது. 

முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் பிரித்வி ஷா கண்டிப்பாக ஆடுவார் என்பதை கேப்டன் கோலி உறுதி செய்துள்ளார். பிரித்வி ஷா இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ரோஹித் சர்மா கடைசி டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் அணியிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார். 

எனவே பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் தான் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பதை உறுதி செய்துள்ள கோலி, ஏற்கனவே கூறியதைப்போலவே ராகுல் ஐந்தாம் வரிசையில் தான் ஆடுவார் என்பதையும் உறுதி செய்துள்ளார். 

ஒருநாள் போட்டி குறித்து பேசிய கேப்டன் கோலி, ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. பிரித்வி ஷா தான் கண்டிப்பாக தொடக்க வீரராக இறங்குவார். ராகுல் மிடில் ஆர்டரில் தான் ஆடுவார். அவருக்கு மிடில் ஆர்டரில் தொடர் வாய்ப்புகள் வழங்கி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக்க விரும்புகிறோம் என்று கோலி தெரிவித்தார். 


 
உத்தேச இந்திய அணி:

மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.