Asianet News TamilAsianet News Tamil

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய ஹரியானா அரசு பேருந்து ஓட்டுநருக்கு ரிவார்ட் வழங்கி ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது.
 

bus driver sushil mann who saved rishabh pant life honoured by haryana government
Author
First Published Dec 31, 2022, 9:54 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஹரித்வார் மாவட்டம் நார்சன் பகுதியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.இ ரக சொகுசு காரை ரிஷப் பண்ட் தான் ஓட்டியுள்ளார். 90 கிமீ வேகத்தில் சென்ற ரிஷப் பண்ட்டின் கார் சாலைத்தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. 

சாலை தடுப்பில் மோதி பலமுறை சுழன்று விழுந்ததில் கார் தீப்பற்றி எரிந்தது. கார் ஜன்னலை உடைத்து வெளியேற முயற்சித்த ரிஷப் பண்ட்டை எதிரே வந்த பேருந்து ஓட்டுநர், அப்பகுதியில் இருந்த மக்கள் இணைந்து காப்பாற்றி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயங்களுடன் மிகவும் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு அந்த மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்..! பண்ட்டின் தாயாரிடம் அக்கறையுடன் நலம் விசாரித்த பிரதமர் மோடி

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தலை மற்றும் முதுகில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்த கோர விபத்தில் ரிஷப் பண்ட் உயிர்பிழைத்தது உண்மையாகவே அதிர்ஷ்டம் தான். விபத்துக்குள்ளான ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர் சுஷில் மான் மற்றும் நடத்துநர் பரம்ஜித் ஆகிய இருவருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

ரிஷப் பண்ட் காருக்கு எதிரே வந்த பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் சுஷில் மான் தான், பண்ட்டின் கார் விபத்துக்குள்ளானதும் உடனடியாக பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டு ஓடிவந்து காப்பாற்றினார். அவருக்கு ரிஷப் பண்ட் யார் என்றே தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், விபத்துக்குள்ளான சக மனிதரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில் விரைந்து செயல்பட்டு ரிஷப் பண்ட்டை காரிலிருந்து தூக்கினார்.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்

இதுகுறித்து பேசிய பேருந்து ஓட்டுநர் சுஷில் மான், கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதும் உடனடியாக பேருந்தை ஓரங்கட்டிவிட்டு, காரை நோக்கி ஓடினேன். அந்த டிரைவர்(ரிஷப் பண்ட்) கார் ஜன்னலை உடைத்துவிட்டு பாதி வெளியே வந்துவிட்டார். நான் ரிஷப் பண்ட்.. கிரிக்கெட் வீரர்.. என் மொபைலில் என் தாய்க்கு ஃபோன் செய்து தெரிவித்து விடுங்கள் என்றார். நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை என்பதால் எனக்கு அவரை யார் என்று தெரியவில்லை. ஆனால் என் பேருந்தில் பயணித்த பலருக்கு அவரை அடையாளம் தெரிந்தது. அவரது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அவரை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். காரில் இருந்த 7-8 ஆயிரம் ரூபாயை அவரிடமே கொடுத்துவிட்டேன் என்றார் சுஷில் மான்.

சுஷில் மானின் மனிதாபிமான செயலை பாராட்டும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு ரிவார்ட் வழங்கி ஹரியானா அரசு போக்குவரத்து கழகம் கௌரவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios