பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே குயின்ஸ்லாந்தில் நடந்த போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கிறிஸ் லின் அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் பிரயாண்ட் 23 பந்தில் 31 ரன்கள் அடிக்க, லின் அதே 23 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 48 ரன்களை விளாசினார். அதன்பின்னர் பர்ன்ஸ் 11 பந்தில் 22 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் 10 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதையடுத்து 10 ஓவரில் 115 ரன்கள் அடித்தது பிரிஸ்பேன் ஹீட் அணி.

முதல் இன்னிங்ஸின் இடையே மழை குறுக்கிட்டு, போட்டி தாமதமானதால் போட்டியின் இடையே 10 ஓவர்களாக குறைக்கப்பட்டதால், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு 10 ஓவரில் இலக்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது. 10 ஓவரில் 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே அடித்ததால் டி.எல்.எஸ் முறைப்படி பிரிஸ்பேன் ஹீட் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டன் கிறிஸ் லின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.