டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவான அணிகளாக திகழ்கின்றன. இவற்றுடன் ஆஃப்கானிஸ்தான் அணியும் மிகவும் வலுவான அணியாக திகழ்கிறது. ரஷீத் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்குகிறது. 

இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து அசத்திவருகிறது. நியூசிலாந்தில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றது. அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை இழந்த இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் தீவிரத்தில் உள்ளது. ஃபின்ச் தலைமையிலான அந்த அணியும் வலுவான அணியாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளும் சிறந்து விளங்குகின்றன. தென்னாப்பிரிக்க அணி புதிய கேப்டனான டி காக்கின் தலைமையில் எழுச்சி பெற்றுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் நடந்துவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் டி20 தொடரில் கலந்துகொண்டு வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வழிநடத்தும் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா, டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

Also Read - நியூசிலாந்து வீரரின் நேரடியான விமர்சனத்துக்கு ரஹானேவின் பதிலடி

இதுகுறித்து பேசிய பிரயன் லாரா, இந்திய அணி வலுவாக உள்ளது. எனவே இந்தியா வெல்வதற்கான வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் ஆடுகிறது. அதனால் அந்த அணி வெல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த உலக கோப்பை எளிதானதாக அமையாது. ஆஸ்திரேலிய அணி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸை போட்டியாளர்காக பார்க்கும்.  வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவாக இருந்தாலும், அனைத்து அணிகளை நினைத்தும் அது வருந்தக்கூடிய சூழல் உள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடுவதில்லை. எனவே இந்த உலக கோப்பை கடுமையான போட்டியாக இருக்கும் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.