ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான பிரெட் லீ, ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர். ஆஸ்திரேலிய அணிக்காக 1999ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆடிய பிரெட் லீ, 76 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 310 விக்கெட்டுகளையும் 221 ஒருநாள் போட்டிகளில் ஆடி 380 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2003, 2007ம் ஆண்டுகளில் பாண்டிங்  தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது, அந்த இரண்டு உலக கோப்பைகளிலுமே பிரெட் லீ முக்கிய பங்கு வகித்தார். தனது காலக்கட்டத்தில் ஆடிய சச்சின், லாரா, ராகுல் டிராவிட், ஜெயசூரியா, சங்கக்கரா, ஜெயவர்தனே, விவிஎஸ் லட்சுமணன் ஆகிய பல சிறந்த பேட்ஸ்மேன்களை தனது ஃபாஸ்ட் பவுலிங்கால் மிரட்டியவர் பிரெட் லீ. 

பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியுள்ள பிரெட் லீ, சச்சின் டெண்டுல்கர் தான் ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதற்கான போதிய நேரத்தை அவர் பெற்றிருப்பார். அது மிகவும் வியப்பாக இருக்கும். அவர் ஃபாஸ்ட் பவுலிங்கை ஆடுவதை பார்த்தால், பேட்டிங் கிரீஸில் ஸ்டம்புக்கு பின்னால் நின்று ஆடுவதை போன்று இருக்கும். அவ்வளவு அசால்ட்டாக ஆடுவார். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தான். 

சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் முழுமையான கிரிக்கெட்டர் என்றால், அது தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் தான். கேரி சோபர்ஸ் ஆடியதை நான் நேரில் பார்த்ததில்லை. டிவியில் ஹைலைட்ஸ் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்தவரையில், மிகச்சிறந்த மற்றும் முழுமையான கிரிக்கெட்டர் ஜாக் காலிஸ் தான் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

ஜாக் காலிஸ், ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர். பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக ஆடி தென்னாப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்துள்ளார். காலிஸ் 519 சர்வதேச போட்டிகளில் ஆடி 577 விக்கெட்டுகளையும் 25,534 ரன்களையும் குவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் ரன்கள், ஜாகீர் கான் வீழ்த்திய விக்கெட்டுகள் ஆகிய இரண்டையும் சேர்த்த கலவைதான் ஜாக் காலிஸ்.