Asianet News TamilAsianet News Tamil

Joe Root: ரூட் பக்கா பிளேயர்.. ஆனால் மொக்கை கேப்டன்..! ரொம்ப ஓபனா பேசிய மெக்கல்லம்

ஜோ ரூட் சிறந்த கிரிக்கெட்டர்; ஆனால் அவரிடம் கேப்டன்சிக்கான திறன்கள் இல்லை என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
 

brendon mccullum opines joe root is an outstanding cricketer but does not have leadership qualities
Author
Chennai, First Published Dec 13, 2021, 2:58 PM IST

சர்வதேச கிரிக்கெட்டில் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஜோ ரூட். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் ஜோ ரூட்டும் சிறந்த வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறார். டி20 கிரிக்கெட்டில் ரூட் ஆடவில்லை.

110 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜோ ரூட் 10 ஆயிரம் ரன்களை நெருங்கிவிட்டார். இந்த ஆண்டு கூட, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகிய தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடி சதங்களாக விளாசி ஏகப்பட்ட ரன்களை குவித்தார். 903 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் ஜோ ரூட்.

ஒரு பேட்ஸ்மேனாக அவர் மலை மலையாக  ரன்களை குவித்தாலும், ஒரு கேப்டனாக அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த ஆண்டில் மட்டுமே 7 டெஸ்ட் போட்டிகளில் ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியடைந்திருக்கிறது. கேப்டன்சியில் கோட்டைவிடுகிறார் ரூட். விராட் கோலி, கேன் வில்லியம்சன் ஆகிய கேப்டன்களுடன் அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட்டிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி. இந்நிலையில், அந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு ஜெயிக்க வாய்ப்பிருந்ததாகவும், ஆனால் ஒரு கேப்டனாக ரூட் அதை தவறவிட்டுவிட்டதாகவும் கூறியுள்ள பிரண்டன் மெக்கல்லம், ரூட் சிறந்த கிரிக்கெட்டர்; ஆனால் சிறந்த கேப்டனுக்கான தகுதிகள் அவரிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பிரண்டன் மெக்கல்லம், ஜோ ரூட் சிறந்த கிரிக்கெட்டர். அவரை நல்ல கேப்டன் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அதை இங்கிலாந்து பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா மீது அழுத்தம் உருவானபோது, அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இங்கிலாந்து தவறிவிட்டது. 

இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது இங்கிலாந்தின் 7வது தோல்வி. ஒரு ஆண்டில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது வங்கதேசம் (9 தோல்வி) தான். இந்த ஆண்டில் இங்கிலாந்து இதுவரை 7 போட்டிகளில் தோற்றிருக்கிறது. கேப்டன் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதுடன், வியூகங்கள் வகுப்பதிலும் வல்லவராக இருக்க வேண்டும். அந்தவகையில், ரூட் என்னை பொறுத்தமட்டில் நல்ல கேப்டன் கிடையாது.  ஆஸ்திரேலியாவை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வாய்ப்பிருந்தும், அதை ரூட் தவறவிட்டுவிட்டார் என்று மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios