தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. தோனியின் வலதுகரமாக திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களை குவித்துள்ள ரெய்னா, 18 டெஸ்ட் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியில் முக்கிய பங்காற்றியவர் ரெய்னா. குறிப்பாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக ஆடினார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்த ரெய்னா, அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அவரது இந்த இரண்டு சிறப்பான இன்னிங்ஸ்களும் தான் இந்திய அணி, இறுதி போட்டிக்கு முன்னேறுவதற்கு காரணமே.

ஃபீல்டிங்கிலும் மிரட்டக்கூடியவர். ஜாண்டி ரோட்ஸுக்கே பிடித்த ஃபீல்டர் ரெய்னா. ஆனாலும் ரெய்னா 2017க்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்த நிலையில், 2019 உலக கோப்பைக்கான மிடில் ஆர்டரி பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில், ரெய்னாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் ஆடிய தொடரை ரெய்னா சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அத்துடன் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இதுவரை இந்திய அணியில் மீண்டும் நுழைய முடியவில்லை. 

ஆனாலும் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தனது கம்பேக்கிற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற முனைப்பில் ரெய்னா இருக்கிறார். 

இந்நிலையில், அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பிருக்கிறதா என்ற ரசிகரின் கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், சுரேஷ் ரெய்னா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அருமையான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஆனால் இப்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை பார்க்கும்போது, ரெய்னாவிற்கு இனிமேல் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் என வலுவாக உள்ளது. ரெய்னா இந்த இரண்டு பேட்டிங் ஆர்டரில் இறங்கி மிடில் ஓவர்களில் ஆடும் பேட்ஸ்மேன். அவரை பின்வரிசையில் எல்லாம் இறக்க முடியாது. எனவே அவர் ஆடினால் மிடில் ஆர்டரில் தான் ஆட வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாத அளவிற்கு பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் நன்றாக செட் ஆகிவிட்டது. எனவே இந்திய அணியில் ரெய்னாவுக்கான ரோல் இப்போது கிடையாது.

ஒருவேளை டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன், தொடர்ந்து கேஎல் ராகுலே, தொடக்க வீரராக இறக்கப்படுகிறார் என்றால், தவான் ஆட வாய்ப்பில்லை. அப்படி தவான் டி20 அணியில் ஆடாத பட்சத்தில் ரெய்னாவுக்கு குறைந்தபட்ச வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் சொல்ல சங்கடமாகத்தான் இருக்கிறது.. என்னை பொறுத்தமட்டில் ரெய்னாவுக்கு இனிமேல் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.