இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, டி20 உலக கோப்பையை கண்டிப்பாக வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. 

அதற்காக நல்ல வெரைட்டியான ஆல்ரவுண்டர்களை கொண்ட சிறந்த காம்பினேஷன் கொண்ட அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டிவருகிறது. பேட்டிங் ஆர்டர் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் உறுதியாகிவிட்டது. பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தான் ஃபாஸ்ட் பவுலர்களாக அணியில் இடம்பெறுவார்கள். தீபக் சாஹருக்கும் வாய்ப்புள்ளது. 

இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி பல விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்த ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஆடுவார்களா என்பது பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. 

ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கே அதிகமான வாய்ப்புள்ளது. எனவே குல்தீப் - சாஹல் இருவரில் ஒருவர்தான் ஆடும் லெவனில் இருப்பார். இருவருமே இணைந்து ஆடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரையே எடுத்துக்கொண்டோமேயானால், முதல் இரண்டு போட்டிகளில் சாஹல் ஆடினார். கடைசி போட்டியில் சாஹல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாகத்தான் குல்தீப் ஆடினாரே தவிர, சாஹலுடன் இணைந்து குல்தீப் ஆடவில்லை. 

குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. உலக கோப்பைக்கு பின்னரே இருவரும் இணைந்து ஆடவில்லை. 

டி20 போட்டிகளில் மட்டுமல்லாது ஒருநாள் போட்டிகளிலும் இருவரும் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது. நாளை(15ம் தேதி) சென்னையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த பரத் அருண், அணிக்கு அனைத்து வகையிலும் நல்ல பேலன்ஸை தரக்கூடிய வகையில் சரியான காம்பினேஷனுடன் ஆட வேண்டும். அந்த சரியான காம்பினேஷன் எது என்றுதான் பரிசோதித்து கொண்டிருக்கிறோம். எனவே அணிக்கு பேலன்ஸ் அளிக்கக்கூடிய காம்பினேஷன் தான் ஆடும். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே பங்களிப்பு செய்யக்கூடிய ஆல்ரவுண்டராக ஜடேஜா இருக்கிறார். அது அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஆடுவதற்கான தேவை இருந்தால், கண்டிஷன், தேவை ஆகியவற்றின் அடிப்படையில், அதற்கான தேவையிருந்தால், இருவரையும் சேர்ந்து ஆடவைக்கலாம். ஆனால் அணியின் பேலன்ஸ் தான் முக்கியம் என்று பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். 

இதையேதான் ஏற்கனவே கேப்டன் கோலியும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.