உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் முன்னெப்போதையும் விட பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக இருப்பதுதான் கூடுதல் பலம். பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அருமையாக இருப்பதுடன் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடியும் அசத்தலாக வீசிவருகிறது. 

இந்திய அணியின் பவுலிங்தான் இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பும்ராவின் பவுலிங் தான் இந்திய அணியின் மிகப்பெரிய பலமே. தொடக்கத்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி, பும்ரா தெறிக்கவிடுகிறார். அபாரமாக வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு விக்கெட்டையும் வீழ்த்திவிடுகிறார். புவனேஷ்வர் குமாரும் ஷமியும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக வீசுகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் சிறந்த ஸ்விங் பவுலரான புவனேஷ்வர் குமார், பந்துவீச கடினமான இரண்டு பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார். கிரிக்பஸ் ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், டேவிட் வார்னர் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகிய இருவருக்கும் பந்துவீசுவது கடினம் என்றும் அவர்களுக்கு பந்துவீசும் போது ஒரு பவுலர் தனது முழு திறமையையும் பயன்படுத்தி தனது சிறந்த பவுலிங்கை வீச வேண்டும் என்றும் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவருமே நடந்து முடிந்த ஐபிஎல் 12வது சீசனில் தெறிக்கவிட்டனர். வார்னர் 692 ரன்களை குவித்து இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை தட்டிச்சென்றார். ஆண்ட்ரே ரசல், கேகேஆர் அணிக்காக அபாரமான சில இன்னிங்ஸ்களை ஆடினார். 200க்கு அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் இந்த சீசனை முடித்த ஒரே பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.