சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமான தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் புவனேஷ்வர் குமார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, 2-2 என தொடர் சமனடைந்தது.
இந்த தொடரில் இந்திய அணிக்கு பெரிய பாசிட்டிவாக அமைந்தது, இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் மற்றும் புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ஆகியவை தான்.
புவனேஷ்வர் குமார் இந்த தொடரில் அருமையாக பந்துவீசினார். பவர்ப்ளேயில் வழக்கமாகவே அபாரமாக பந்துவீசக்கூடிய பவர்ப்ளே ஸ்பெஷலிஸ்ட் பவுலரான புவனேஷ்வர் குமார், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பவர்ப்ளேயில் அருமையாக ஸ்விங் செய்து வீசி தென்னாப்பிரிக்க வீரர்களை தெறிக்கவிட்டார்.
குறிப்பாக 2வது டி20 போட்டியில் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதில் 3 விக்கெட்டுகளை பவர்ப்ளேயிலேயே வீழ்த்தினார். பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார் புவனேஷ்வர் குமார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை வென்ற புவனேஷ்வர் குமார் மற்றுமொரு சாதனையையும் படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது புவனேஷ்வர் குமாருக்கு 4வது தொடர் நாயகன் விருது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளனர். அவர்களுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்த புவனேஷ்வர் குமார், 4வது தொடர் நாயகன் விருதை வென்று, அவர்களை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
