டி20 அணியில் பேட்டிங் டெப்த்தை அதிகப்படுத்தும் முனைப்பில் பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின் பவுலர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது இளம் ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. 

கடந்த 2017ம் ஆண்டு, தனது 18வது வயதிலேயே இந்திய டி20 அணியில் அறிமுகமாகிவிட்டார் சுந்தர். அதன்பின்னர் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் இந்த சூழலில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. 

அவரும் அதை சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறார். அண்மையில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் முக்கியமான பல போட்டிகளில் அபாரமாக ஆடி அரைசதங்களை அடித்து தமிழ்நாடு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். தன்னால் சிறப்பாக பேட்டிங்கும் ஆடமுடியும் என்று சுந்தர் நிரூபித்ததன் விளைவாக டி20 அணியில் முதன்மை ஸ்பின்னராக இடம்பிடித்துவிட்டார். 

ஆனால் ஒருநாள் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒரேயொரு சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது டி20 அணியில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட வாஷிங்டன் சுந்தருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், ஒருநாள் அணியில் சுந்தருக்கான வாய்ப்பு குறித்து பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். சென்னையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பரத் அருணிடம் சுந்தருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பரத் அருண், வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை விரைவில் பிடிப்பார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை சரியாக பயன்படுத்தி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே எதிர்காலத்தில் கண்டிப்பாக ஒருநாள் அணியில் சுந்தர் இருப்பார் என்று பரத் அருண் தெரிவித்தார்.