டி20 உலக கோப்பையில் பும்ரா ஆட வாய்ப்பு..! பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்
டி20 உலக கோப்பையிலிருந்து இன்னும் ஜஸ்ப்ரித் பும்ரா விலகவில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக இருப்பதால் கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கும் அணியாக பார்க்கப்படுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க
ஆனால் இந்திய அணியின் பலம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் அவர் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக பும்ரா ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது.
பும்ராவின் காயம் சரியாக 6 மாதங்களாகும் என்பதால் அவரால் டி20 உலக கோப்பையில் ஆடமுடியாது என்று தெரிகிறது. இந்த காயம் குணமடைய நீண்டகாலம் ஆகும். ஆனால் கண்டிப்பாக பும்ரா ஆடவேண்டுமென்றால் வலி நிவாரணி எடுத்துக்கொண்டு ஆடலாம். ஆனாலும் அவரால் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாது, பும்ராவின் காயம் தீவிரமடையும் வாய்ப்பிருக்கிறது என்பதால் பும்ரா விஷயத்தில் பிசிசிஐ பொறுமை காப்பது அவசியம் என்று ஐசிசி மருத்துவர் தெரிவித்தார்.
டி20 உலக கோப்பையில் பும்ரா ஆடவில்லை என்றால் அது கண்டிப்பாகவே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஜடேஜாவும் ஆடாத நிலையில், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கும் ஆஸி., ஆடுகளங்களில் பும்ரா ஆடாதது பெரும் பாதிப்பாக அமையும் என்பதால் இந்திய அணி நிர்வாகமும் ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.
பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடமாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, பும்ரா இன்னும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகவில்லை. அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்வாரா என்பது தெரியவில்லை. ஆனால் இதுவரை அணியிலிருந்து நீக்கப்படவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு
பும்ராவின் ஃபிட்னெஸ் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அணியில் மாற்றத்தை செய்வதற்கான கடைசிநாள் வரை அவரது ஃபிட்னெஸ் கண்காணிக்கப்படும். கண்டிப்பாகவே அவர் ஆடமுடியாது என்ற நிலையில், மாற்று வீரர் அறிவிக்கப்படுவார். முகமது ஷமி மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.