சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பேரிழப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா உருவான சீனாவை விட, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. உலகம் முழுதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

இந்தியாவில் கொரோனாவால் 629 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்க, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். உலக பொருளாதாரமே முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஆதரவற்றோரும் ஏராளமாக உள்ளனர். பள்ளிகள், முகாம்களில் பாதுகாப்புக்காக தங்கவைக்கப்பட்டுள்ளோரும் ஏராளமாக இருக்கின்றனர்.

இந்நிலையில், பள்ளிகள், அரசு இல்லங்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொருளாதாரா ரீதியாக பின் தங்கிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை இலவசமாக வழங்குவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி அறிவித்துள்ளார். லால் பாபா அரிசி ஆலையுடன் இணைந்து கங்குலி ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கங்குலியின் இந்த முன்னெடுப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம். இவரை போல வசதி படைத்தவர்கள் பலரும் உதவ முன்வந்தால், ஏழை, எளிய, ஆதரவற்ற மக்கள் உணவுக்காக கஷ்டப்படமாட்டார்கள். அவர்களின் உணவு தேவையை பூர்த்தீ செய்யலாம்.