விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மாவின் பெயரை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனான ரோஹித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி அசாத்திய சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில், 5 சதங்களை விளாசி சாதனை படைத்தார். ஒரு உலக கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகமான சதங்கள் இதுதான். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 29 சதங்கள், 3 இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியிலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். 

இந்நிலையில், அவரது பெயரை உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. கேல் ரத்னாவுக்கு அடுத்த கிரேடு விருதான அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இஷாந்த் சர்மா, ஷிகர் தவான் மற்றும் இந்திய மகளிர் அணியை சேர்ந்த வீராங்கனை தீப்தி சர்மா ஆகிய மூவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.