இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது. 

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன. கடைசி டி20 போட்டியில் காலில் காயமடைந்த ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பேட்டிங் ஆடும்போது, ரோஹித்துக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. எனவே 60 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்ற ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்யவில்லை. இந்நிலையில், அவர் அந்த காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகியுள்ளார். 

எனவே ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் அணியில் ராகுல் 5ம் வரிசையில் தான் இறங்குவார் என ஏற்கனவே விராட் கோலி உறுதி செய்திருந்ததால், பிரித்வி ஷாவுடன் தொடக்க வீரராக இறங்க இன்னொரு வீரர் தேவை. எனவே நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ஆடிவரும் மயன்க் அகர்வால், ரோஹித்துக்கு பதிலாக ஒருநாள் அணியில் இணைகிறார். ஒருநாள் போட்டிகளில் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 

டெஸ்ட் அணியில் ரோஹித்துக்கு பதிலாக பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். 2018ம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா, காயம் காரணமாக அந்த தொடரில் ஆடமுடியாமல் விலகினார். அதன்பின்னர் பிரித்வி ஷா டெஸ்ட் அணியில் இடம்பெறவேயில்லை. மயன்க் அகர்வாலும் ரோஹித்தும் தொடக்க வீரர்களுக்கான இடங்களை கைப்பற்றிவிட்டனர். இந்நிலையில், ரோஹித் சர்மா இந்த தொடரிலிருந்து விலகியதால் பிரித்வி ஷா மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.