கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மார்ச் 25ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், மே 18ம் தேதியிலிருந்து மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கில், நிறைய தளர்வுகள் செய்யப்பட்டன. அதன்படி, கிரிக்கெட் ஸ்டேடியங்கள் ரசிகர்கள் இல்லாமல் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.

எனவே வீரர்கள் பயிற்சி எடுப்பதற்கான சூழல் உருவானது. இந்நிலையில், இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர், பிசிசிஐ அனுமதி பெறாமல் தன்னிச்சையாக மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள போய்சரில் உள்ளூர் வீரர்களுடன் பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டார். 

பிசிசிஐ-யின் ஒப்பந்தத்தில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர் ஷர்துல் தாகூர். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர், பிசிசிஐ-யின் அனுமதி பெறாமலேயே பயிற்சியை தொடங்கியதை பிசிசிஐ சரியான நடவடிக்கையாக பார்க்கவில்லை. அதுவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா மிகவும் தீவிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கிறார் ஷர்துல் தாகூர். பிசிசிஐ இன்னும் பயிற்சிக்கு அனுமதிக்கவில்லை. அப்படியிருக்கையில், ஷர்துல் தாகூர் இப்படி செய்திருக்கக்கூடாது. இது சரியான செயலல்ல என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்.