Asianet News TamilAsianet News Tamil

ரோஹித் - ரஹானே டெஸ்ட் அணியின் கேப்டன் யார்..? குழப்பத்தில் பிசிசிஐ.. ராகுல் டிராவிட் கைகாட்டும் நபரே கேப்டன்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்பதில் பிசிசிஐ குழப்பத்தில் இருப்பதாகவும், புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொல்வதுதான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு என்று தெரிகிறது.
 

bcci in dilemma between rohit sharma and ajinkya rahane for the test captaincy in virat kohlis absence in first test against new zealand
Author
Chennai, First Published Nov 11, 2021, 4:30 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியது. நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி வரும் 14ம் தேதி நடக்கும் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

14ம் தேதி ஃபைனலை ஆடிவிட்டு அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு வரும் நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

வரும் 17, 19, 21 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி, இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடுகிறது.

தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கும் மேலாக இந்திய வீரர்கள் சிலர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவருகின்றனர். அதனால் சிறிது ஓய்வு தேவை என்பதற்காக விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி நியூசி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். கூடுதல் ஓய்வு தேவை என்ற வகையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

டிசம்பர் 3ம் தேதி தொடங்கி மும்பையில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் கோலி ஆடுவார் என்று தெரிகிறது. எனவே, கோலி ஆடாத முதல் டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா - அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரில் யாரை கேப்டனாக நியமிப்பது என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே தான், இதுவரை கோலி ஆடாத போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். ஆஸி., சுற்றுப்பயணத்தில் கூட  விராட் கோலி ஆடாத போட்டிகளில் அணியை சிறப்பாக வழிநடத்தி, ஆஸி., மண்ணில் 2வது முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது ரஹானேவின் கேப்டன்சியில் தான். ஆனால் அண்மைக்காலமாக அவரது பேட்டிங் ஃபார்ம் சரியில்லை. அவர் அணியில் தேவையில்லை; அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி அல்லது வேறு வீரரை சேர்க்கலாம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

அதேவேளையில், டி20 அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். எனவே டெஸ்ட் அணி கேப்டனாக ரோஹித் சர்மா -  அஜிங்க்யா ரஹானே ஆகிய இருவரில் யாரை நியமிப்பது என்பதில் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளதாக தெரிகிறது.

இந்த விஷயத்தில், புதிய பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ராகுல் டிராவிட் யாரை கைகாட்டுகிறாரோ அவர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios